புதுடெல்லி: டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, ஜூன் 26-ம் தேதி அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதிக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற இணையதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் இடம்பெற்றுள்ளது. சிபிஐக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையும், சிபிஐயால் கைது செய்யப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.