தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தாமதமாவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிரமமே முக்கியக் காரணம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி இடையே அமைக்கப்படும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு செய்த அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகளால் தமிழகத்தில் சாலைத் திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும், இதன் காரணமாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 3 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் கட்கரி கூறினார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் துறைமுகங்கள், சுற்றுலா மற்றும் தொழில்கள் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
விழுப்புரத்தில் இருந்து பெங்களூரு வரையிலான 180 கிமீ நான்கு வழிச் சாலையும், சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக கல்பாக்கத்தை இணைக்கும் சாலையும் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக நடைபெற வேண்டுமானால் நிலம் கையகப்படுத்துவதில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.