தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் ஓராண்டுக்கும் மேலாக சுற்றித்திரியும் 10-க்கும் மேற்பட்ட யானைகள் நெல், மா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி, தண்ணீர் குழாய்கள், விவசாய நிலங்களில் உள்ள வேலிகளை சேதப்படுத்தி வருகின்றன.
வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தாலும், மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அவ்வப்போது வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வடகரை அருகே ஓச்சநடை பகுதியில் கடந்த 2 நாட்களாக 3 யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
அதில் ஒன்று வேறு இடத்திற்கு சென்றிருந்த நிலையில், இன்று காலை 2 யானைகள் வடகரை-மேட்டுக்கால் சாலையில் சுற்றித்திரிந்தன. இதனால் அவ்வழியாக செல்லும் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
பின்னர் 2 யானைகளும் விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள நெல் வயல் குளத்தில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. சிறிது நேரம் நீந்திவிட்டு கரைக்கு சென்ற யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “காடுகளில் இருந்து வெளியே வந்த 13 யானைகள் சிறு சிறு குழுக்களாக பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டாலும், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து சேதப்படுத்துவது தொடர்கிறது.
பகலில் எங்காவது ஓய்வெடுக்கும் இவை, இரவில் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,” என்றார்.