கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் அங்கு செல்லலாம்.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில், தொப்பி தூக்குப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாயின்ட், அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களைக் காணலாம். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) காலை முதல், பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்த பின், வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்,” என்றார்.