காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில், பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற மண்ணேரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று குடமுழுக்கு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை 9.30 மணிக்கு கலச பூஜை நடந்தது. அப்போது, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து கலசங்கள் ஏந்தி, மண்ணேரி அம்மன் கோயில் விமான கோபுரத்தில் கலசாபிஷேகம் செய்தனர்.
அதன்பின், அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் எம்எல்ஏ சுந்தர், பழையசீவரம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி நீலமேகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.