புதுடெல்லி: கேரள மாநில கால்நடை பராமரிப்புத்துறை கடந்த ஜூலை 31-ம் தேதி புதிய விதியை அறிவித்தது. அதில், கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு வரப்படும் முட்டைக்கு இரண்டு பைசா நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட அறிக்கையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கேரள மாநிலத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஒரு கோடி முட்டைகள் வரவழைக்கப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு முட்டைக்கு இரண்டு பைசா வீதம் ஒரு கோடி முட்டைக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் கேரள கால்நடை பராமரிப்புத் துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் மேற்கண்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து முட்டைகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்ததை மறுபரிசீலனை செய்ய கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.