திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை உபதேசம் செய்பவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ம் தேதி வரை வைணவ சமயத்தில் புலமை பெற்றவர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருப்பாவை பிரசங்கம் செய்ய தேவஸ்தானம் அழைத்துள்ளது.
2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை திருப்பாவை பிரசங்கம் செய்தவர்கள் இந்த ஆண்டும் செய்ய விரும்பினால் ஏற்பு கடிதம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் ஏற்பு கடிதங்களை சிறப்பு அலுவலர், ஆழ்வார் திவ்யபிரபந்த திட்டம், ஸ்வேதா பவன், திதிதே திருப்பதி என்ற முகவரிக்கு அக்டோபர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மாதிரி ஒப்புதல் படிவம் www.tirumala.org இணையதளத்தில் கிடைக்கிறது.
மற்ற விவரங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறநிலையத் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பங்களிப்பு ₹4.61 கோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 76,200 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,492 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ₹4.61 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டது.வைகுண்டம் கியூ வளாகத்தில் உள்ள அறைகள் இன்று காலை நிரம்பின.
பக்தர்கள் 3 கி.மீ., நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 24 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.