புதுடில்லி: ரூ.400 கோடி அளவுக்கு மோசடி… சீனாவை சேர்ந்த ஆன்லைன் கேமிங் செயலி மூலம் ரூ.400 கோடி அளவுக்கு மோசடி நடந்தது எப்படி என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனர்களுக்கு சொந்தமான ஆன்லைன் கேமிங் செயலி பீவின். சிறிய விளையாட்டுகளை விளையாடி பணம் சம்பாதிக்கலாம் என இணையதளவாசிகளை ஆசையை தூண்டி உள்ளது. இதன்படி பலர், இந்த செயலியில் எளிதாக கணக்கு துவங்கி விளையாடி உள்ளனர். பல வகைகளில் பணம் செலுத்தி உள்ளனர்.
ஆனால், பயனர்கள் கணக்குகளில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும் அதனை அவர்கள் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்த செயலி அந்த பணத்தை எடுப்பதை தடுத்ததுடன், அவர்கள் செலுத்தி பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இவ்வாறு ஏமாந்த பலர், போலீசில் புகார் அளித்தனர். பிறகு, இந்த வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணையை துவக்கியதும் அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியே வரத்துவங்கின.
இது தொடர்பான வழக்கை கவனித்து வந்த ‘பினான்ஸ்’ என்ற அமைப்பு கூறியதாவது: அமலாக்கத்துறை விசாரணையில், இந்த செயலியை எல்லை தாண்டிய கிரிமினல்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இவர்கள் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் மோசடி செய்தது தெரியவந்தது. விளையாட்டு மூலம் சேர்ந்த பணம் ‘ரீசார்ஜ் நபர்கள் ‘ என அழைக்கப்படுபவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தங்களது வங்கிக்கணக்கை அவர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதித்தனர். இந்த கணக்குகளில் சேரும் பணம் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி அதனை சீனர்களின் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு ‘ரீசார்ஜ் நபர்கள்’ ஆக செயல்பட்ட ஒடிசாவை சேர்ந்த அருண் சாஹூ மற்றும் அலோக் சாஹூ ஆகியோரை அமலாக்கத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். வங்கிக்கணக்குகளில் சேரும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற உதவிய பீஹாரை சேர்ந்த பொறியாளர் சேதன் பிரகாஷ் என்பவரும் அதிகாரிகளிடம் சிக்கினார்.
சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஜோசப் ஸ்டாலின், சீனாவின் கன்சு மாகாணத்தைச் சேர்ந்த பை பெங்யுன் என்பவரை, தனக்கு சொந்தமான, ‘ஸ்டூடியோ 21 பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இணை இயக்குனராக நியமித்தார்.இவர்கள் இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களிடம் ரூ.400 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இந்த பணம் அனைத்து கிரிப்டோ கரன்சி வாயிலாக சீனர்களின் 8 கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சீனர்களின் மோசடிக்கு உதவியாக இருந்த இந்தியர்கள் அனைவரும் ‘டெலிகிராம்’ செயலி வாயிலாக தொடர்பில் இருந்துள்ளனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் இந்த மோசடிக்கு பின்னால் இன்னும் யாரேனும் உள்ளனரா என்பதை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.