புதுடெல்லி: பிரசாரத்தின் போது உடல் நலக்குறைவால் மயங்கி சரிந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கதுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிக்கொண்டு இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்தார்.
அருகில் நின்ற நிர்வாகிகள், அவரை தாங்கிப்பிடித்து இருக்கையில் அமர வைத்தனர், பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கேயிடம் உடல்நலம் விசாரித்தார். அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் பேசியதாகவும் அப்போது விரைவில் உடல்நலம் தேற வாழ்த்தியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக டாக்டர் சிகிச்சை அளித்தபின் மயக்கம் தெளிந்து மீண்டும் பேசிய கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை சாகமாட்டேன் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.