தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் ஆராய்ச்சி படிப்பு (பி.ஹெச். டி) மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஆராய்ச்சி பயிலும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைகழகம்/கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிட சான்று (Nativity Certificate) முதலியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அறை எண். 17, மாவட்ட ஆட்சியரக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.