புதுடில்லி: உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் பிரதமர் மோடியுடன், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயர்மட்டக்குழு ஆலோசனைக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உட்பட அனைத்து உலகளாவிய நிறுவனங்களிலும் சீர்திருத்தம் அவசியம் என்பதில் இந்தியாவும் ஜமைக்காவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், ஜமைக்காவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா நம்பகமான மற்றும் உறுதியான கூட்டாளி என்றும் கூறினார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை உசைன் போல்ட்டை விட வேகமாக நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.