புதுடில்லி, ”குறிப்பிட்ட வழக்குக்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற, பல்வேறு வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர். இதில், என் நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர்,” என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது ஒரு வழக்கறிஞர் சுரங்க ஒப்பந்தம் தொடர்பான வழக்கைக் குறிப்பிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக, முந்தைய நாளிலும் மற்றொரு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வழக்கை வெவ்வேறு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு, சில உத்தரவுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க முடியாது. எனவே, ஒரே வழக்கில் பல வழக்கறிஞர்கள் ஆஜராவதை நிறுத்த வேண்டும். உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள்.
தலைமை நீதிபதி என்ற எனது குறுகிய அதிகாரங்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள். இது எனது நம்பகத்தன்மையை சோதிக்கிறது. வழக்குகளின் பட்டியலை நான் சரியாகச் செய்யவில்லை என்று மாறிவிடும். அவர் கூறியது இதுதான்.