சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நாளை கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 30 வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை நெருங்கும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் இருக்கும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C ஆகவும் இருக்கும்.
இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதுடன் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடாவில் இன்று தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நாளை வடக்கு ஆந்திரா, தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.