சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி என்எல்சி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், “என்.எல்.சி., நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தொழிலாளர் நல தீர்ப்பாயம், தொழிலாளர் நல நீதிமன்றங்கள் உள்ள நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க முடியாது.
இது தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, தீர்ப்பாயம் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.
மேலும், என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னைக்கு சுமுக தீர்வு காண மத்திய அரசு 6 மாதங்களுக்குள் உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் மத்திய தொழிலாளர் நலத்துறை, நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், என்எல்சி துணைப் பொது மேலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.