கோவை: பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை போன்ற பவானியாறு கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், யாரும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கட்டுமரம் மூலம் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையின் முக்கிய நீர் ஆதாரமான பில்லூர் அணை மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் உள்ளது. பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீலகிரி மற்றும் கேரள மலை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 27) அதிகாலை 97 அடியை தாண்டியது. அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தாலும், 97 அடியைத் தாண்டியதும், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியதால், இந்த 14 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக அணையின் முக்கிய 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் பவானியாற்றிலும் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை போன்ற பவானியாறு கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், யாரும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கட்டுமரம் மூலம் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.