புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (அக்டோபர் 16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் அக்டோபர் 21-ம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும்.
அதன்பின் ஒவ்வொரு மாதமும் ரேஷனில் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.
இப்போது மாதம் 2000 ரூபாய் பெறுபவர்களுக்கு இனி மாதம் 3000 ரூபாய் கிடைக்கும். அதேபோல், ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 பெறுபவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 கிடைக்கும். உயர்த்தப்பட்ட மானியத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும்.
இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 21,329 பயனாளிகள் பயனடைவார்கள். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை நவம்பர் 2024 முதல் வழங்கப்படும். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
விஜய் கட்சி மாநாட்டு பேனரில் ரங்கசாமி படம் இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டபோது, “விஜய் மாநாட்டுக்கு வாழ்த்துகள். விருப்பமுள்ளவர்கள் எனது படத்தை பேனரில் போடுங்கள்.
அது அவர்களின் விருப்பம்.” கோவில் நிலங்கள் குறித்த விவரங்கள் எப்போது ஆன்லைனில் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு, ”கோவில் நிலங்கள் தொடர்பான விவரங்கள் பட்டியல் விரைவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,” என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.