புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனது 2024 மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். இதனால் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை மதியம் 12 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மனு தாக்கலில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, காலை 11 மணிக்கு கல்பேட்டா பேருந்து நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பேரணியாக (‘ரோடு ஷோ’) செல்ல உள்ளனர்.
பேரணியில் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் நேற்று டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஆசி பெற்றார்.
ஏற்கனவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதால், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால், தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் சோனியா, ராகுலுக்கு அடுத்தபடியாக பிரியங்கா தனது குடும்பத்தில் இருந்து 3-வது எம்.பி ஆவார்.