காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பஸ் நிலையம் அருகே நகரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 18-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மூலம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, 19-ம் தேதி, நவக்கிரக ஹோமம், தனபூஜை, 20-ம் தேதி, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து கஷாயம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, ஸ்ரீ நகரீஸ்வரர் கோவிலுக்கு சிவாச்சாரியார்கள் அழைத்து வருதல் நடந்தது.
தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இக்கோவிலில், நான்காம் நாளான நேற்று காலை, மேள தாளங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா குப்பாபிஷேக விழா நடந்தது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வஜ்ரவேலு மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.