ஜபல்பூர் (மத்திய பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் நிசார் என்ற நபர் ஒரு வீடியோவில் ‘பாகிஸ்தான் வாழ்க’ மற்றும் ‘இந்தியாவை வீழ்த்து’ என்று கோஷமிட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் பைசல் நிசார் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஜபல்பூர் காவல் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி செவ்வாய் கிழமைகளில் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி பாரத் மாதா கி ஜே என்று 21 முறை கூற வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காவல் நிலையம் வந்த பைசல் நிசார் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி பாரத் மாதா கீ ஜே என்று 21 முறை முழக்கமிட்டார்.
ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து அதை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைசல் நிசார், “நான் தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறேன். உயர்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்திருக்கிறதோ அதை நான் கடைப்பிடிப்பேன்.
ஒரு நபர் நான் ரீல் வீடியோவுக்காக பேசுவதை பதிவு செய்தார். நான் தவறு செய்துவிட்டேன். இனி இதை செய்ய மாட்டேன். இதுபோன்ற தவறு செய்ய வேண்டாம் என்று மற்றவர்களிடம் கூறுவேன்’’ என்றார். ஜபல்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் ராஜ் பதாரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜாமீனில் வெளிவந்த பிறகு இது அவருக்கு முதல் செவ்வாய்கிழமை.
சரியான நேரத்தில் இங்கு வந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி 21 முறை தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி பாரத் மாதா கி ஜா என்று கோஷமிட்டார். இனிமேல், அவர் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி செவ்வாய்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இங்கு வந்து அவ்வாறே செய்ய வேண்டும்.
நீதிமன்ற விசாரணை முடியும் வரை அவர் அவ்வாறு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.