ராமேஸ்வரம்: கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் இலங்கை கடற்படையினர் 61 தமிழக படகுகளை சிறைபிடித்து 450 மீனவர்களை கைது செய்தனர். இதில் 88 மீனவர்கள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை பறிமுதல் செய்தல், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தல், அபராதம் கட்ட தவறிய மீனவர்களை சிறையில் அடைத்தல், அபராதம், சிறை தண்டனை என இருவிதமான நடவடிக்கைகளிலும் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமபாண்டி ஆகியோரின் 2 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின்போது பறிமுதல் செய்தனர். படகில் இருந்த மோகன், மகேந்திரன், ராம்குமார், மாரி கணேஷ், கண்ணன், அன்பரசன், முனீஸ் பிரபு, குருசெல்வம், பாண்டி, முத்துக்கருப்பையா, ராமபாண்டியன், தங்கராஜ், ராஜு, அந்தோணி பிச்சை, பூமிநாதன், சுந்தரபாண்டி மற்றும் 16 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து நேற்று அவர்கள் உள்ளூர் போலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 16 மீனவர்களையும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். இதையடுத்து 16 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தை திரும்ப பெற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜசந்தி, இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவின் செயலாளர் கலாநிதிநந்திக குமநாயக்கவுடன் உரையாடினார்.
இதுகுறித்து, இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்த சந்திப்பில், பாக் ஜலசந்தி கடல் பகுதியில், இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும், இந்திய அரசு சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 23-ம் தேதி நெடுந்தீவு கடலில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர். இத்தகைய கைதுகள் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகின்றன.
நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 128 தமிழக மீனவர்களையும், 199 படகுகளையும் விடுவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இப்பிரச்னைக்கு, கூட்டு நடவடிக்கை குழு முன்வைக்கும் ஆலோசனைகள், நிலையான தீர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.