புதுடெல்லி: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (என்பிபிஏ) சமீபத்திய விலை உயர்வு அறிவிப்புக்கான காரணங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்குமாறு விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். மாணிக்கம் தாகூர் எழுதிய கடிதத்தின் நகலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 25 தேதியிட்ட கடிதத்தில், பரவலாகப் பயன்படுத்தப்படும் 8 மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் உயர்த்தும் முடிவு குறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தனது கவலையைப் பதிவு செய்துள்ளது. அந்த கடிதத்தில் மாணிக்கம் தாக்கூர் கூறியிருப்பதாவது:-
எட்டு மருந்துகளின் பட்டியலிடப்பட்ட பதினொரு ஃபார்முலாக்களின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் உயர்த்த தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை மலிவானவை மற்றும் நாட்டின் பொது சுகாதாரத் திட்டங்களில் அவசர சிகிச்சைகளுக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படலாம். இந்த விலை உயர்வுக்கான காரணங்களை அரசு அசாதாரண சூழ்நிலையாகவும், மக்கள் நலன் கருதியும் கூறியிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த மிக முக்கியமான முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்குவதும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் தனது கடிதத்தில், “இந்த விலை உயர்வு பல லட்சம் மக்களின் அத்தியாவசிய மருந்து தேவையை பாதிக்கிறது. விலை உயர்வு அறிவிப்பை விளக்கிய NPPA, செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் விலை, உற்பத்திச் செலவில் அதிகரிப்பு, பரிமாற்ற விலையில் மாற்றம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து விலை மாற்றத்திற்கான விண்ணப்பங்களை ஆணையம் பெற்றுள்ளது.
மருந்துகளின் இந்த திடீர் விலை உயர்வு பயனாளிகள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த விலைவாசி உயர்வால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏற்படும் உண்மையான தாக்கத்தை ஆய்வு செய்ய ஒரு சுயாதீன ஆய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் விலை நிர்ணயம் செய்வதற்கான கொள்கைகளை இந்தக் குழு உருவாக்கலாம் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.