மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை நாளில் நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
இந்நிலையில், நேற்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இரவு 10.30 மணிக்கு அம்மன் உற்சவம், இரவு 10.30 மணிக்கு அம்மனை தோளில் சுமந்து கொண்டு தாலாட்டு பாடியபடி பூசாரிகள் ஊஞ்சல் மேடைக்கு வந்ததையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிரே திரண்டிருந்த கையில் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.