புதுடெல்லி: மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், பார்லிமென்டின் இரு அவைகளின் குளிர்கால கூட்டத்தொடரை, நவ., 25 முதல், டிச., 20 வரை நடத்த, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று, பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்படும்.
இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடர் குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:- கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்ஃப் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜே.பி.சி., குளிர்கால கூட்டத்தொடரின் போது தனது பரிந்துரைகளை முன்வைக்கும்.
அதே அமர்வில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எல்லையில் 4 ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணிந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விரிவான விளக்கம் அளிப்பார். குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இதேபோல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் தனி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.