சென்னை: ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கு இந்த காப்பீட்டு திட்டம் பெரும்பாலான ஏழைகளுக்கு உதவியாக இருந்து வருகிறது. இதற்கிடையே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை கடந்த 29-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏற்கனவே அமலில் இருந்து வரும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வரும் நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க பொருளாதார அளவுகோல் எதுவும் இல்லை.
ஏழை, நடுத்தர, உயர் நடுத்தர அல்லது பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி ஆதார் அட்டை அடிப்படையில் 70 வயதை பூர்த்தி செய்த யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய முடியும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களது பெயரை பதிவு செய்ய மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது. அதாவது, https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது ‘ஆயுஷ்மான்’ எனப்படும் செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வலைதளம், செல்போன் செயலி மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம்? என பல்வேறு விளக்கங்களுடன் சுகாதார ஆணையம் தனது வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ செயலியை பொறுத்தமட்டில் இந்த செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்ததும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுக்கு தகுதி உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது.