சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து ஈரமான காற்று குவிந்து வருவதாலும், வட இந்தியாவில் இருந்து வறண்ட காற்று காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ., 12 மற்றும் 13-ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், உள்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், மழை காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.