பல்லாரி: பெங்களூரு கே.ஜி. ஹள்ளி மற்றும் டி.ஜே. ஹள்ளி போன்ற கலவர வழக்குகளை திரும்பப் பெற காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
பல்லாரியில் நேற்று பேட்டியளித்த அவர், ‘‘குறிப்பிட்ட மதத்தை திருப்திப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பழைய ஹூப்பள்ளியில் கலவரக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
“காங்கிரஸ் அரசு இந்துக்கள் மீதான தாக்குதல் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கிறது. தலித்துகள் மற்றும் அரசியலமைப்பை ஆதரிப்பதாக கூறும் காங்கிரஸ் உண்மையில் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள்” என்று அவர் விமர்சித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் 5 வாக்குறுதி திட்டங்கள் குறித்து தெளிவான அறிக்கையை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கூறிய பிரஹலாத் ஜோஷி, “முதல்வர் சித்தராமையா கர்நாடகா மாநிலத்தை திவாலாக்கி வருகிறார்” என்றும் கூறினார்.