மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இந்த ஆண்டில் இதுவரை ஐபிஓ மூலம் நிறுவனங்கள் ரூ.1.19 லட்சம் கோடி திரட்டியுள்ளன. இந்நிலையில், ஐபிஓ மூலம் அதிக நிதி திரட்டிய பங்குச் சந்தைகளில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா ரூ.2.20 லட்சம் கோடியுடன் முதலிடத்திலும், சீனா ரூ.89,800 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
நடப்பு ஆண்டில் மட்டும் 68 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ளன. சமீபத்தில் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி ஐபிஓ மூலம் ரூ.11,300 கோடியும், ஏசிஎம்இ சோலார் ரூ.2,900 கோடியும் திரட்டியது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஐபிஓ மூலம் ரூ.27,870 கோடியை திரட்டியது.
இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆரோக்கியமாக இருப்பதாகவும், புதிய பங்குகளை வெளியிடுவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, நாட்டில் 17.9 கோடி டிமேட் கணக்குகள் உள்ளன.
இவற்றில் 3.5 கணக்குகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்திற்கு 35 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.