சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், “சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்தாலும், எந்த பகுதியிலும் மழை நீர் தேங்கவில்லை.
இனி கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது,” என்றார். ஆய்வுக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- முதல்வரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தோம். மழை நீரை அகற்ற 1499 மோட்டார் பம்புகளும், 150 உறிஞ்சும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மழைக்கான பணிகளை விட, தற்போது பெய்யும் மழைக்கான பணிகளை அதிகப்படுத்தியுள்ளோம்.
கூடுதல் மோட்டார்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சியில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னை கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் பணிக்காகவும் மூடப்பட்டுள்ளது. கடந்த முறைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இம்முறை மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
மழையைப் பொறுத்து கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதுவரை அதிக மழை பதிவாகவில்லை. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. மழை குறித்து சமூக வலைதளங்களில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் கால்வாய்கள் துார்வாரும் பணி விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட தமிழகம் – தெற்கு ஆந்திரா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.