மும்பை: மகாராஷ்டிரா மாநில பட்ஜெட்டில் 21 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மகாராஷ்டிர சட்டப் பேரவையின் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான அஜித் பவார் நேற்று தாக்கல் செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வர் அஜித் பவார் பேசியதாவது: “முதல்வரின் என் அன்புத் தங்கை” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 60 வயது வரையுள்ள தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மின்கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். இவை அனைத்தும் ஜூலை முதல் அமலுக்கு வரும். இந்த பல்வேறு திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும். பருத்தி மற்றும் சோயாபீன் விவசாயிகளுக்கு 5,000 (எக்டருக்கு) வழங்கப்படும். மேலும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு போனஸாக ரூ.5 வழங்கப்படும்.
வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பட்ஜெட் உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.