புளோரிடா: தொழில்முனைவோர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றது. “சிறந்த எலான் மஸ்க் மற்றும் உணர்ச்சிமிக்க விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்க செயல்திறன் துறையை கூட்டாக வழிநடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இரண்டு அமெரிக்கர்களும் சேர்ந்து, அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளை குறைப்பது மற்றும் அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பது போன்றவற்றில் எனது நிர்வாகத்தை கவனம் செலுத்துவார்கள். ‘சேவ் அமெரிக்கா’ என்பதற்கு இது அவசியம். அரசின் நீதியை வீணடிப்பவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சி அலைகளை அனுப்பும்.
அவர் ஜூலை 4, 2026 வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பார்” என்று டிரம்ப் கூறினார். செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். இத்துறை பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும், மேலும் வெள்ளை மாளிகை, நிர்வாக அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விஷயங்களில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார். தனது ஆட்சியில் இருக்கும் அரசின் நிர்வாகப் பொறுப்பை கவனிக்க வேண்டியவர்கள் குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நெருங்கிய நண்பரான மஸ்க் மற்றும் ஆதரவாளரான விவேக் ராமசாமிக்கு நிர்வாகத்தில் பொறுப்புகளை வழங்கி வருகிறார்.