அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தற்போதைய உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோருக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஐடி பிரிவு சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நடிகை ஸ்ரீ ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அநாகரீகமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
அவரைப் போலவே பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, நடிகர் போசானி கிருஷ்ணமுரளி ஆகியோரும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை மோசமாக விமர்சித்தனர். தற்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியமைத்துள்ள நிலையில், தனிநபரை மிகவும் அநாகரீகமாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நடிகை ஸ்ரீ ரெட்டி மீது குடிவாடா, அனகாப்பல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.