சென்னை: சென்னை அருகே குன்றத்தூர் அருகே மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் தனது மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
குழந்தை வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். வீட்டில் எலி தொல்லை அதிகம் இருந்ததால், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.
சமீபத்தில் இவரது வீட்டிற்கு வந்த 2 பேர் வீட்டில் எலி மருந்தை தூவி எலிகள் வராமல் இருக்க அந்த மருந்தை வீடு முழுவதும் தெளித்தனர். மருந்தில் இருந்து பரவிய குமட்டல் காரணமாக அனைவரும் வாந்தி, மயக்கம் அடைந்தனர். குழந்தைகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். பெற்றோர் போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.