காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே கடந்த 50 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட சட்டம் இருந்தும் அதை கர்நாடகம் பின்பற்றவில்லை. கடந்த ஆண்டு வறட்சியால் கர்நாடகா 90 டிஎம்சி மட்டும் திறந்துவிட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் பாதித்தது.
இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்துவிட்டது. ஆனால், கனமழையால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடகா உபரி நீரை திறந்து விட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 106.51 அடியாக உள்ளது. அணைக்கு 73.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில், 9154 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அதேபோல் காவிரி டெல்டா பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் 2000 கனஅடியாக குறைக்கப்பட்டு தற்போது 3000 கனஅடி வரை வழங்கப்படுகிறது.