சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 21-ம் தேதிக்குள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தென் தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. 21-ம் தேதிக்குள் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 25-ம் தேதி கடலோர தமிழகத்தின் பல இடங்களிலும், உள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.