சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் எம்.பிருத்விராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம். பி.அமித், கே.ஜெ. பிரவீன்குமார், கட்டா ரவிதேஜா, வருவாய் அலுவலர் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் விடுத்துள்ள கோரிக்கைகள் விவரம்:-
தொகுதி வாரியாக வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக வழங்க வேண்டும். வாக்காளர் முகவரி மாறியதும், 2 இடங்களில் ஓட்டு உள்ளதாக கடிதம் அனுப்பப்படுகிறது. அந்த கடிதம் கிடைத்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணி திருப்திகரமாக இல்லை. அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் கட்சி சார்ந்தவர்கள். குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்ற இடங்களில் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வாக்காளர் திருத்தம் தொடர்பான ஆன்லைன் பதிவு விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும். இறந்தவர்களின் பட்டியலில் உரிய கவனம் செலுத்தி திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது:-
தேர்தல் உதவி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு படிவங்களை உறுதி செய்ய வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு பெயர் நீக்க விண்ணப்பங்களை உறுதி செய்த பிறகே பெயர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தொகுதி மற்றும் மண்டல அளவில் படிவங்கள் தொடர்பான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தொடர் புகார்கள் வருகின்றன. உரிய முறையில் பணி செய்யாதவர்களை நீக்க வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து லயோலா கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார்.