சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்) குழு அங்கு விரைந்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு (என்டிஆர்எஃப்) விரைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு பகுதி நாகப்பட்டினத்தில் இருந்து தென்-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 830 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் ஆழத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.