சென்னை: கவனமாக இயக்க வேண்டும்… மழைக்காலத்தில் பேருந்துகளை மிக கவனமாக இயக்க வேண்டுமென போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
புயல் உருவாக உள்ள நிலையில் தொலைதூர பேருந்து ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ், தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும், காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும், பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது , சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர், நடத்துநர்கள் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கடலோரச் சாலை பேருந்து ஓட்டுநர்கள் வானிலை அறிவுறுத்தல்களை முறையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.