குஜராத்: பாகிஸ்தான் உளவாளிக்கு தகவல் விற்றவர் கைது… குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவாளிக்குத் தினமும் ரூ.200 க்கு விற்ற நபரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் கடலோர நகரமான துவாரகாவில் பணிபுரிந்து வந்த திபேஷ் கோஹில் என்ற நபர், பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அசிமாவுக்கு பேஸ்புக்கில் பரீட்சயமாகியுள்ளார்.
துவாரகாவில் உள்ள ஓகா பகுதியிலிருந்து முக்கியமான புகைப்படங்களை கோஹில் பாகிஸ்தானுக்குச் சேகரித்து அனுப்பியதாக ATS தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள உளவாளிக்கு கோஹில் அனுப்பியதில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய கடலோர காவல்படை பற்றியது என்று ATS தெரிவித்துள்ளது.
ஓகா துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கோஹில் வாட்சப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய குஜராத் ஏடிஎஸ் அதிகாரி கே சித்தார்த், ஓகாவைச் சேர்ந்த ஒருவர் கடலோரக் காவல்படை பற்றிய விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானின் கடற்படை அல்லது ஐஎஸ்ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பான விசாரணையில் ஓகாவில் வசிக்கும் திபேஷ் கோஹிலை கைது செய்தோம். தீபேஷ், பாகிஸ்தானில் தொடர்பிலிருந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். சொந்தமாக வங்கிக்கணக்கு இல்லாத தீபேஷ் தனது நண்பர் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.200 வீதம் அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார். தீபேஷ் மீது கிரிமினல் சதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.