பெங்களூரு: அமெரிக்காவில் உள்ள நாசாவுடன் இணைந்து இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இறங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவர் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட்டில் வரவிருக்கும் ஆக்ஸியம் மிஷன்-4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லவுள்ளார்.
இதற்காக இந்திய விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவால் ககன்யாத்ரி என அழைக்கப்படும் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விண்வெளிக்கு செல்வதற்காக அமெரிக்காவில் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயிற்சி முடிந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சியின்போது, ஏவுதளத்தைப் பார்வையிடுதல், ஏவுதல் தொடர்பான ஆயத்தப் பணிகள், ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உடையை சோதனை செய்தல், விண்வெளியில் அவர்களுக்கான உணவைத் தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கருவிகள் என்ன என்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்தல், தினசரி செயல்பாடுகள் மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறைகள் கற்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயிற்சியில் இந்திய விண்வெளி வீரர்கள் விரைவில் ஈடுபட உள்ளனர்.