
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாகத் தொடங்கினாலும், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இதேபோல் சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனிடையே, ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், பல்லாவரம் பகுதியில் பல இடங்களில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரம் ரயில் சேவை தாமதமானது. அதன்பின், கடற்கரை – தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் வண்டலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மதியம் 12.15 மணி முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி பலத்த காற்று வீசியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நேற்றிரவு பென்ஜால் புயல் கரையை கடந்ததால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதன் காரணமாக பொது போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது. இதையடுத்து, மின்சார ரயில்கள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.