சென்னை: பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மக்கள் உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்க கார்ப்பரேட் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
அதேபோல், ஆப் மூலம் முன்பதிவு செய்து, வாடகை வாகனங்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இதுபோன்ற ஆப்ஸ் மூலம் செயல்படும் நிறுவன ஊழியர்களின் தேசிய அளவிலான கூட்டம் சென்னையில் 2 நாட்கள் நடந்தது.
இதில் இந்திய ஆஃப் பேஸ்ட் போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உதய், தலைவர் பிரசாந்த், பொருளாளர் தர்மேந்தர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், செய்தி தொடர்பாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: 2019ல், ஆப் அடிப்படையிலான நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை, மத்திய அரசு வகுத்தது. ஆனால் பல மாநிலங்கள் அதை இதுவரை அமல்படுத்தவில்லை. அத்தகைய பணியாளர்களுக்கு நல வாரியம் போன்றவை அமைத்து, அரசின் கண்காணிப்பில் வைத்தால் மட்டுமே பணி பாதுகாப்பு அளிக்க முடியும்.
குறிப்பாக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட வேண்டும். பைக் டாக்சி போன்றவற்றுக்கு உரிமம் வழங்குவதோடு, இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றையும் வழங்க வேண்டும், தேசிய அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.