மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்க உள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே இடம்பெற வேண்டும் என்று ஃபட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். துணை முதல்வர் பொறுப்பை ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும் என ஷிண்டே பதிலளித்துள்ளார். இந்நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஷிண்டே சகாப்தம் முடிந்துவிட்டது. அவர் முதல்வராகப் பதவியேற்று இரண்டாண்டுகள்தான் ஆகிறது.
இப்போது அவரது பயன் முடிந்துவிட்டது. அதனால் அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஷிண்டே மீண்டும் இந்த மாநிலத்தின் முதல்வராக முடியாது. அவர்களால் (பாஜக) ஷிண்டேவின் கட்சியைக் கூட உடைக்க முடியும். பாஜகவின் அரசியல் இப்படித்தான் இருக்கிறது. உடன் வேலை செய்பவர்களின் கட்சியை உடைத்து முடித்து விடுவார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இது அவர்களின் கட்சியிலோ அல்லது மகாயுதி கூட்டணியிலோ ஏதோ தவறு இருப்பதையே காட்டுகிறது” என்றார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 280 இடங்களில் 235 இடங்களை மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.
இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முறையே 57 மற்றும் 41 இடங்களில் வெற்றி பெற்றன. மறுபுறம், மகாவிகாஸ் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி 20 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.