சென்னை: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில், ரயில் பாதுகாப்பு செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு திசைகளிலும் 14 மின்சார ரயில்களின் சேவை நவம்பர் 22 முதல் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு புதிய அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, “புதிய அட்டவணை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். தற்போது கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது” என்று சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெற்கு ரயில்வேயின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று முதல், 10 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
பயணிகளின் நலன் கருதி தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 5 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரியில் இருந்து தியாகராய நகருக்கு 5 பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும், 20 பேருந்துகள் இயக்கப்படும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.