புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியரிலும், தமிழகத்தில் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியச் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றுக்குப் பதிலாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா, பாரதீய சாக்ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “இந்த சட்டங்களில் தண்டனைக்கு பதிலாக நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி விரைந்து விசாரணை நடத்தி விரைவான நீதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதிய சட்டத்தின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா) முதல் வழக்கு, புது தில்லி ரயில் நிலையம் அருகே சாலைப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததற்காக தெருவோர வியாபாரி மீது பதிவு செய்யப்பட்டதாக நேற்று காலை ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமித் ஷா, அது தவறான தகவல்.மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள பைக் திருடப்பட்டது தொடர்பாக நள்ளிரவு 12.10 மணிக்கு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை அய்யர்விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியது தொடர்பாக அப்தாப் அலியின் 304(2) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை திருவல்லிக்கேணியில் இளம்பெண் குளிப்பதை படம் பிடித்ததாக சாரதி (21) என்ற வாலிபரை ஐஎஸ்ஏஎஸ் போலீசார் கைது செய்தனர்.