சென்னை: பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உரிமைக்குரல் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, விதிகளை மீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.சி.சிவசங்கரிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அமைச்சர் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் இயக்க, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதை ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்து துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் சார்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விபத்து ஏற்பட்டால், காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,” என்றார். போக்குவரத்து துறையின் நஷ்டம் குறித்த கேள்விக்கு தொடர்ந்து, ”டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களில் சுமார் ஒரு கி.மீ.க்கு ரூ. 1.08 என்றளவில் வசூலிக்கப்படுகிறது. இங்கு, 52 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அதனால், இழப்பு ஏற்படுவது இயல்பு. அதற்கு அரசு நஷ்ட ஈடு கொடுத்து வருகிறது. இப்படிப்பட்ட போக்குவரத்துத் துறை இயக்கத்தால்தான் தமிழகத்தில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்றார். முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் வாரிசு ஆணைகளை வெளியிட்ட அமைச்சர், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையை கணினிமயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறைச் செயலர் க.பனீந்திர ரெட்டி, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பி ஜான் வர்க்கீஸ், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநர் கோ.செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.