புதுச்சேரி: கடந்த நவம்பர் 30-ம் தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஒரே நாளில் வரலாறு காணாத 48.4 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அணைகள் திறக்கப்பட்டதால் புதுச்சேரி கிராமப்புறங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் வேரோடு சாய்ந்தன.
துணை மின் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கால்வாய்கள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளன. மத்திய குழுவினர் வந்து வெள்ள சேதத்தை ஆய்வு செய்தனர். நகரப் பகுதி ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. நேற்றும் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை வானம் இருண்டு காணப்பட்டது. காலை 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.