பழநி: பழநியில் இருந்து முதியோர்கள் இன்று காலை அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணத்தை மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு, 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 200 பேரை, அதாவது, 1,000 பக்தர்களை, ஆண்டுக்கு ஐந்து முறை இலவசமாக அழைத்துச் சென்று, வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை துவக்கியுள்ளது.
அதன்படி இன்று காலை பழனியில் இருந்து 7-வது குழுவினர் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணமாக புறப்பட்டனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 முதியோர் இடம் பெற்றனர். நேற்று பஸ்களில் பழனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழனி கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
நேற்று இரவு பழனி மலைக்கோயிலுக்கு சென்ற முதியோர் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் பிரசாதம் வழங்கினர். பின்னர், இன்று காலை பழனியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரக்குன்றம் நோக்கிச் சென்றனர். அவர்களை பழனி சப்-கலெக்டர் கிஷன்குமார், கோவில் துணை கமிஷனர் வெங்கடேசன், உதவி கமிஷனர் லட்சுமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி மற்றும் பலர் பார்வையிட்டனர்.