கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக இருந்த அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். உக்கடம் ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பாஷாவை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். முன்னதாக அஞ்சலி பின் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை சிறையில் இருந்த பாஷாவுடன் மனம் விட்டு பேசினேன். இது ஒரு பெரிய சோகம். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை வெளியே கொண்டு வர போராடுவோம்.
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக கவர்னரிடம் மனு கொடுப்பது கால விரயம். கவர்னர் கையெழுத்திடமாட்டார். ஆளுநரும், பா.ஜ.க.வும் ஒரே கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதையும் சிந்திப்பதையும் தவிர வேறு எந்த கொள்கையும் அவர்களிடம் இல்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லாத அதிகாரம், நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள ஆளுநருக்கு இருந்தால், ஜனநாயகம் எங்கே? இதுதான் ஜனநாயகமா? மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஆட்சி அமைக்க வேண்டும். எங்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் கவர்னர் கையெழுத்தை பிறகு பார்க்கலாம் என்று சிறைக் கதவுகளைத் திறந்திருப்போம். அவர் கூறியது இதுதான்.