சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட அலுவல் மொழி ஆணையத்தால் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு மாநில சட்ட அலுவல் மொழி ஆணையம் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 37 மத்திய சட்டங்கள், 63 தமிழ்நாடு சட்டங்கள் (43 மறுபதிப்பு, 20 புதிய பதிப்பு) என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
சட்ட அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சட்டச் செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மாநில சட்ட அலுவல் மொழி ஆணையத் தலைவர் தரணி, ஆணைய உறுப்பினர்கள் கோபி ரவிக்குமார், முகமது ஜியாபுதீன், வில்ஸ்டோ டாஸ்பின், முரளி அருபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 100 சட்ட புத்தகங்களை தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.