சென்னை: உங்கள் வீட்டில் ஒரு மொட்டை மாடி இருந்தால், அங்கேயே ஒரு காய்கறித் தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான உணவை நாமே தயாரிக்க முடியும். சரி ஏன் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க…
மாடித் தோட்டம் என்றவுடன் கிட்டத்தட்ட அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வி ‘ஐயோ’ கடுமையாக சுட்டெரிக்கும் எனது மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது சாத்தியமா?
ஒரு தாவரம் நன்கு வளர்வதற்கான தகுதிகளுள் மிகவும் முக்கியமானது சூரிய ஒளிதான். அதிலும் அதிக வெயில் உள்ள இடத்தில்தான் கீரை, காய்கனிகள், தானியங்களின் விளைச்சல் அதிகமாகவும், தரமானதாகவும் உள்ளது.
மாடித் தோட்டம் அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், மண் நிரப்புவதற்கான தொட்டிகளையோ அல்லது சாக்குப் பைகளையோ அல்லது ப்ளாஸ்டிக் பைகளையோ எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்துக்கொள்ளலாம்.
நீங்கள் மண்ணை இடும்போது சிறிது நாட்டுப் பசுவின் சாணம் கிடைத்தால் சேர்த்துக்கொள்ளலாம். அது நல்ல உரமாக இருக்கும்.
செடி பை வைக்கும் முன் சிறு சரளை கல் சிறிது கொட்டி அதன் மேல் வைப்பதால் நன்மை உண்டு.
செடி வளர்க்கும் தொட்டியில் அதிகப்படியான தண்ணீர் தேங்கக் கூடாது. ஆகவே கேரிபேக், பிளாஸ்டிக் பொருட்களில் பக்கவாட்டின் கீழ் பகுதியில் மூன்று அல்லது நான்கு சிறிய துளைகள் போடவும். இந்த துளைகள் அதிகப்படியான நீரை தொட்டிகளில் தங்கவிடாமல் வெளியேற்றி செடிகளை பாதுகாக்கிறது.
கீரை வளர்ப்பதற்கு உயரம் குறைவான பொருட்களையும், செடி வளர்ப்பதற்கு சற்று உயரமான பொருட்களையும், செடி முருங்கை மற்றும் கொடிகளில் படரக்கூடிய செடிகளை வளர்ப்பதற்கு உயரம் அதிகமான பொருட்களையும் பயன் படுத்த வேண்டும்.
ஆரோக்கியத்திறாக அமைக்கப்படும் மாடித்தோட்டத்தில் விதைத் தேர்வு என்பது மிகவும் முக்கியம்.
நாம் விதைகளை மண்ணில் விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்தல் என்பது விதைகளில் நல்ல முளைப்புத்திறன் கிடைப்பதற்காக செய்வது.
விதைகளை மண்ணில் விதைப்பதற்கு முதல்நாள் இரவில் விதைகளை பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், பசுங்கோமியம், பசுஞ்சானம், கரைத்த தண்ணீர், ஆட்டுச் சாணம் கரைத்த தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் ஊற வைக்கவும்.
கீரை மாதிரி செடிகள் விதைத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே முளைத்துவிடும். மற்ற காய்கறி விதைகள் முளைப்பதற்கு 5லிருந்து 7 நாட்கள் வரை ஆகும்.
வெண்டை, தக்காளி, கத்திரி, கொத்தவரை, மிளகாய் போன்ற செடிகளை ஒரு தொட்டியில் அல்லது பையில் ஒன்று மட்டும் வளர்க்கவும்.
விதைப்பது தண்ணீர் ஊற்றுவது – காலைப் பொழுது, இயற்கை உரமிடுவது பூச்சி மருந்திடுவது – மாலைப் பொழுது சிறந்தது.
இயற்கை உரங்களை மாடித் தோட்டத்தில் மண்ணிற்கும், செடிகளுக்கும், அதில் பூக்கும் பூக்களுக்கும் தெளிப்பதால் நல்ல விளைச்சலுடன் அதிக சத்து மற்றும் அதிக சுவையும் கிடைக்கிறது.